Saturday 28 December 2013

சிரித்துக்கொண்டே இருக்கும் அந்த மரப்பாச்சி!

சிரித்துக்கொண்டே இருக்கும் அந்த மரப்பாச்சி!

அந்த மரப்பாச்சி இன்றும் சிரித்துக்கொண்டே தான் இருக்கிறது!

அது பிறந்த தினத்தன்று அந்த மரத்தச்சன்
அதன் முகத்தில் புன்னகையை விதைத்துவிட்டு
ஒரு சுவரோர அலமாரியை அதன் இருப்பிடம்  ஆக்கிவிட்டான்
அந்த ஜன்னலோர அலமாரியை மாசில்லா வேட்கையோடு பார்த்தபடி
அந்த மரப்பாச்சி சிரித்துக்கொண்டே தான் இருந்தது...

திடீரென்று ஒருநாள் அது விலைபேசப்பட்டு
அம்மரதச்சனால் ஒரு வீட்டிற்கு அனுப்பப்பட்டது
அந்த சுவரோர அலமாரியை இருப்பிடமாக நினைத்து
தான் அடைந்த ஏமாற்றத்திலும்
அந்த மரப்பாச்சி  சிரித்துக்கொண்டே தான் இருந்தது...

அது அந்த வீட்டிற்குள் வரவேற்கப்பட்ட தினத்தன்று
கண்ணாடியால்  மூடப்பட்ட ஓர் அலமாரியில் குடிவைக்கப்பட்டது
இன்னொரு மரப்பாச்சிக்கு ஜோடியாக...!

அலங்காரம் நன்றாகத்தான் இருந்தது...
அதற்க்கும் அந்த வீட்டிற்கும்!

வெளிக்கட்டிலிருந்த அந்த ஊஞ்சலின் ஒற்றை இருக்கையை ஏகாந்தக்கனவோடு பார்த்தபடி,
அந்த மரப்பாச்சி இன்றும் சிரித்துக்கொண்டே தான் இருக்கிறது...

அவளும் சிரித்துக்கொண்டே தான் இருக்கிறாள்...

                                                                                    -நிவேதா

No comments:

Post a Comment