Thursday 3 March 2016

நிழலெனப் பிரகாசிக்கும் ஐந்தாம் பரிமாணம்!


நூல் பொம்மையின் ஆட்டம்
நூல்களில் இருந்து
விடுபட்ட பிறகுதான் துவங்குமென
நெருப்பின் நிழலோடு
வாதம் செய்து கொண்டிருக்கின்றன
இரு கண்கள்!

நான்கு இழைகளில்
ஆன்மாவைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும்
அந்த பொம்மையின் கண்கள்
எதிரே குவிந்திருக்கும்
கூட்டத்தில் தேடுவது
நிச்சயம் உன்னையல்ல!

அது நான்காவது பரிணாமத்தின்
இல்லாதிருத்தலை நிறைத்துக்கொண்டிருக்கும்
எல்லையற்ற ஏகாந்தப்
பெருவெளியாக இருக்கலாம்!


அங்கு கணக்குகளை மறந்த
அகால அடைவுகளையும்
பெயரற்று உருகும்’
ஸ்வரக் கோர்வைகளையும்
என் இருப்பு இயக்கிக்கொண்டிருக்கலாம்!

அக்கணம் பாதங்கள்
தரையை மறந்த களிப்பில்
ஒவ்வொரு செல்லும்
தன்னைத்தானே இசைத்தபடி
தனித்தனியே அதிரத் துவங்கலாம்!

அந்த அதிர்வின் அடர்த்தி தாளாமல்
ஏதேனும் ஒரு செல்
உடைந்து சிதற நேர்ந்தால்
தரையிழுக்கும் ஈர்ப்பு சக்தியாக மட்டும்
நீ இருந்துவிட்டுப்போ!

நூல் பொம்மையின் இயக்கமும்
புவியீர்ப்பு சக்தியைச் சார்ந்ததென
வாதம் முடக்கப்படுகிறது!

அதோ!
விழுந்து கொண்டிருக்கும்
வால் நட்சத்திரத்தின்
ஐந்தாவது முனையிலிருந்து
நீளும் ஐந்தாவது பரிமாணத்தின்
நிழல்தான் இந்த இருண்ட வானமெனவும்
அதுவே நீயெனவும்
என் கண்களைச் சிமிட்டுகிறாய்!

நெருப்பின் நிழல்
இருண்மையை நீயெனப் பிரகாசித்து
நடனமிட்டுக் களிக்கிறது!
-நிவேதா



உணர்வுபிறழ்வை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்கான வேண்டுதல்...


110 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னான 
பரிணாம வளர்ச்சியில்,
நிறங்களின் உணர்திரனற்ற
என் கண்களை எண்ணி முதல்முறை அழுகிறேன்!

இன்று அதிகாலை
இழுதுமீன் என நினைத்து
நான் உண்ட நெகிழித் துண்டு
என் சிறுகுடலை அடைத்துக் கொண்டிருக்கிறது!

என்னால் நீந்த முடியவில்லை!
நீந்துவதென்ன?அசைய கூட முடியவில்லை!
இந்த ராட்சத மூலக்கூற்றை எதிர்கொண்ட
என் உடலின் நோயெதிர்ப்பு அணுக்கள்
பயந்துபோய் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருக்கின்றன!

அந்த நெகிழியை வெளிக்கொணர
பதினெட்டு மணிநேரமாக முயன்றுகொண்டிருக்கிறேன்...
அடிவயிற்றில் ஏதோ பலமாக அழுத்துவது போல் உள்ளது!

ஒரு மாதத்திற்கு முன்தான்
நான் பிறந்த மணற்பரப்பிற்கு சென்று
முட்டையிட்டு வந்தேன்...
124 முட்டைகளைச் சுமந்துகொண்டு நீந்தும்போது கூட
என் அடிவயிறு இவ்வளவு பாரமாக இல்லை!

நான் பிறந்த இடம் முன்போலில்லை!
இத்தனை ஆண்டுகளாக என் மூளையில்
படிமங்களாய் பதிந்திருந்த காட்சிகளுக்கும்
சமீபத்திய காட்சிகளுக்கும் அப்பப்பா...
600 வித்யாசங்கள்!!!
என் மைய நரம்பு மண்டலத்தில்
ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும்!

என் குடலை அடைத்துக்கொண்டிருக்கும்
இதன் வாசனை எனக்குப் புதிது போலில்லை!
அந்த கடல்பரப்பின் மணலும் இதைப்போல் தான் மணத்தது!

மணலின் வெப்பமும் வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது!
அதன் முப்பது டிகிரிக்கும் அதிகமான வெப்பம்,
முட்டைகளில் பெரும்பான்மைக்குப் பெண்ணுடல் அளித்திருக்கும்!
அவைகள் கடலுக்குள் வந்தபிறகும்
அந்த பாவப்பட்ட மணற்பரப்பிற்கு
மீண்டும் செல்லவேண்டி இருக்கும்!

என் ஓட்டின்மீது ஏதோ உரசிசெல்கிறது.
என்னவென்று உணரமுயல்கிறேன்.
என் வயிற்றை அடைத்துக்கொண்டிருக்கும்
பொருளைப் போலத்தான் தெரிகிறது!

கண்களை விரித்துச் சுற்றிப்பார்க்கிறேன்.
வேறு வேறு அளவுகளில்...
வேறு வேறு வடிவங்களில்...
நெகிழி...நெகிழி...நெகிழி...
எனக்கு வாயைத் திறக்கவே பயமாயிருக்கிறது!
என் அனைத்து மெல்லுறுப்புகளையும்
ஓட்டுக்குள் அடக்கிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது!
என் துர்பாக்கியம்!நான் நன்னீர் ஆமையல்ல!
உலகத்தின் 71 சதவிகித மேற்பரப்பை
சொந்தம் கொண்டாடும் பாவப்பட்ட கடலாமை!

கண்களை மட்டும் இறுக மூடிக்கொள்கிறேன்!
இன்னும் கொஞ்சநாளில்
குஞ்சுபொறித்து வெளிவரப்போகும் என் பிள்ளைகள்
நெகிழியுண்டு வலியில் துடிக்கும் கொடூரக்காட்சி!

அடிவயிற்றில் அழுத்தம் இன்னும் அதிகமாகிறது!
ஆற்றாமை என் தலையையும் சேர்த்து அழுத்துகிறது!
என் மையநரம்பு மண்டலத்தில்
உண்மையாகவே ஏதேனும் பிறழ்வு ஏற்பட்டு,
என் அத்தனை உணர்வுகளும் துண்டிக்கப்பட்டால்
எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!
c51230297635845f34565346f9d704aa.jpg
-நிவேதா








ஆதி உள்ளுணர்வின் பெருங்காடு

எனக்கான பாதையில்தான்
உனக்கான வெளிச்சம் பூக்கிறது என்பதை
நினைவில் வைத்துக்கொள்!

ஒரு பெருங்காட்டின் பேரிரைச்சலை
என் செவிமடல்கள் தாங்கிக் கண்டிருப்பதை
உன் உதடுகள் கவனித்துக் கொள்ளட்டும்!

ஆதிபச்சையத்தின் முதல் துளிர்
சிலிர்க்கவைத்த ரெட்டினல் திரையை
புதைத்து வைத்திருப்பது என் கண்கள் என்பதை
உன் இருப்பு உறுதிப்படுத்திக் கொள்ளட்டும்!

அடர்வனத்து முதல் பூவையும்
வேட்டை மிருகத்தின் மாமிச மிச்சத்தையும்
பிரித்து உணரும் செல்கள் என் நாசியில் ஜனனமானதை
உனது இந்த நொடி மூச்சுக்காற்று
சொல்லிவிட்டு நுழையட்டும்!

ஒரு சிட்டெறும்பின் முதல் அசைவு
சிலிர்ப்பூட்டும் எனது உள்ளுணர்வு
உனது உயிர்பிரியும் கணத்தையும் குறித்துவைத்துதான்
மரணிக்கும் என்பதை மறந்துவிடாதே!

-நிவேதா