Saturday 10 October 2015

வெளிச்ச வெறுமையின் இருள் கமழும் கண்கள்



திரைச்சீலைகள் அகற்றப்பட்ட ஜன்னலின்
வெளிச்ச வெறுமை நீ!
நிசியில் உன் கண்களாய்ப் பூத்து
என் நாசியில் சில்லிட்ட பவழமல்லிப்பூக்கள்
விடியலில் என் செல்களாய்
உதிர்வதை எண்ணிப் பரிதாபப் படுகிறேன்!
உன் கண்களுக்கொரு வாசமுண்டு!
என்னைத் தவிர வேறு யாரும்
உணர்ந்திருக்க முடியாது!
விழுந்து மறைந்த
ஓர் ஆதிநட்சத்திரத்தின் துகளை
என் அலமாரியின் இருட்டில்
புதைத்து வைத்திருக்கிறேன்!
அதன் இருள் கமழ்கிறது
உன் கண்களாய்!
வெளிச்சமற்றதே இருளென்றால்
இருளில் இருப்பதுதான் என்ன!
ஏதுமற்ற சூன்யத்தின் பரிபூரணமாய்
அழுத்தத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கும்
அந்த இருப்பு
நீயாகத்தான் இருக்க வேண்டும்!
இருளின் வாசம் தித்திக்கிறது!
அப்படியே உன் கண்களைப்போல!
அதனை ஸ்பரிசிக்க இசைந்து
கைகளில் அள்ளி
கன்னத்தில் ஒற்றிக்கொள்ள
நேரும் கணத்தில் தான்
வெளிச்ச வெறுமையாய்
தகிக்கத் துவங்குகிறாய்!
உண்மைதான்!
ஜன்னல் திரைகள் பற்றி
எனக்கு எந்த கருத்தும் இல்லை.
-நிவேதா

Thursday 13 August 2015

மழைநீரின் கசப்புத்தன்மை


அந்தக் கோப்பையை நிறைத்துக் கொண்டிருக்கும் 
தேநீரின் நிறமும் கதகதப்பும் 
தான் எனக்கு தேவைப் படுகிறது!

அதன் கசப்புத்தன்மையைப் பிரித்தெடுத்து,
நனைந்த என் கூந்தல் இழையிலிருந்து
சொட்டும் மழை நீரில் கரைத்து,
அவன் கூட்டுக் கதவைத் தட்ட எத்தனிக்கிறேன்!

இந்த மழைநாளில் இப்படியொரு பரிசை
அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான்!

அவன் நாவின் சுவையுணர்த்தும் செல்களெல்லாம்
அந்த கசப்புதன்மையைத்
தக்கவைத்துக்கொள்ள வேண்டுகிறேன்!

இனி அவன் பருகும் ஒவ்வொரு மிடர் மழைநீரும்
என் காட்டுத்தனத்தையே பிரதிபலிக்கும்!

அந்த கசப்புத்தன்மை அவன் நாடிநரம்பெல்லாம்
பரவிப் பெருகி அமரத்துவம் அடைய,
இந்த ராட்சஷியின் கொடூரத்தை
நினைத்து நினைத்தே சாகட்டும்!

-நிவேதா

Friday 22 May 2015

மூளையின் மடிப்புகளில் புதையுண்ட ஒரு ஸ்வரத்தைத் தேடி பூமியின் மையத்திற்கு ஒரு பயணம்...


நரம்புகளற்ற அந்த வீணையின் குடம்
சுழலடிக்கின்ற அதிர்வை
எந்த ஸ்வரத்தில் சேர்ப்பேன் நான்!

பல நூற்றாண்டுகளாய்
மண்ணுக்குள் புதையிடிருந்த
மனித எலும்பினாலான புல்லாங்குழலையும்
தோண்டியெடுத்து இசைத்துப்பார்த்தாகி விட்டது!
இல்லை...அந்த ஸ்வரம் மட்டும் இல்லை...

அதன் ஒரு துளை,
என் மூளையைத் தொட்டுவிட்டு வந்த
மூச்சுக்காற்றில் அந்த அதிசய ஸ்வரத்தின்
சாயல் இருப்பதாகக் கூறியது.
இன்னொரு துளை,
அந்த சாயலைக் கழற்றிவிட்டு வருமாறு எச்சரித்தது.
ஒருவாறு முயன்றேன்...
மூன்றாவது துளை நடத்திய தேர்வில்
படுதொல்வியிய மிச்சம்!
நான்காவது துளைக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைந்தேன்...
ஐந்தும் ஆறும் உண்மையறிந்து கண்ணடித்துக் கொண்டன...
ஏழாவது துளை,
தன்னைப் பிரபஞ்சத்தின் ‘ப்ளாக் ஹோல்’ ஆக
பிரகடனப் படுத்திக் கொண்டது...
அதை என் சுண்டு விரலால் அடித்தேன்...
தன் விரதம் களைந்த ஆற்றாமையில்,
அக்குழல் என் விலா எழும்பினால் ஆனது
என்று அனுமந்த ஸ்தாயியில் அழுதது!
தோண்டியெடுத்த இடத்திலேயே புதைத்துவைத்து வந்தேன்!

அந்த வீணையில் அதே அதிச ஸ்வரம் கசிந்து கொண்டிருந்தது!

குடத்தில் ஏதோ கோளாறு என,
கையை விட்டுத் துழாவினேன்...
அதில் சிக்கியதேல்லாம் ‘ம்’ என்ற அவன் ஒற்றைச்சொல்லின்
வேறு வேறு பரிமாணங்களே!!!
அவற்றிடம் என் கேள்விகளை அடுக்கினேன்...
இயற்பியல் ஆய்வுக்கூடத்தில்
குழிப்பரிவுக் கருவியை அனுகச்சொல்லின!

தேடிச்சென்ற நான் அதனுள்ளேயே விழுந்துவிட்டேன்!
சீறிக்கொண்டு வந்த கோபத்தில்
என் சக்தியெல்லாம் திரட்டிக் கத்தினேன்!
அக்கருவி தன் காதுகளைப் பொத்திக்கொண்டு,
அந்த வீணையின் குடதிற்கே என்னை அனுப்பிவிட்டது!!!


மறுபடியும் அதே ஸ்வரம்...
என் மூளையைத் தனிமைப்படுத்த எண்ணி,
அதன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டேன்.
உந்துவிசை அடங்கிய கணத்தில்
அந்த ஸ்வரம் அனுதார ஸ்தாயியில் சிரித்து
என் சித்தத்தை சிதறடித்தது!!!

இன்றிலிருந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு
புதையுண்டு கிடைக்கப்போகும் இந்த வீணையில்,
என் நரம்புகள் முளைத்திருக்கும் என்றும்,
அதை நானே தோண்டியெடுத்து
இசைதுப்பார்பேன் என்றம் வெறித்தன
அவன் சாயலில் இருந்த அப்பூனையின் கண்கள்!!!
அப்போதாவது அந்த ஸ்வரத்தின்
மர்மம் மறையுமா எனச் சந்தேகித்தேன்...
கண்களை இறுக மூடிக்கொண்டது அப்போனை!
குடமெல்லாம் இருள்...
பூமிக்குள் புதைந்து கொண்டிருந்தது அந்த வீணை!

artissimo1.jpg
-நிவேதா




Saturday 10 January 2015

மரபிழையின் ஆட்சிதெய்வம்

மரபிழையின் ஆட்சிதெய்வம்
மரபிழையின் உள்ளடக்கத்துக்கும்
பிரபஞ்சத்தின் உள்ளடக்கத்துக்கும்
எண்ணிக்கை அளவில்
பெரிய வித்தியாசம் இல்லை!

அரை பழமைவாத மரபிழை படியெடுப்பு,
என் மரபிழையின் ஒரிழைக்குச் சொந்தக்காரி
நான் இல்லையென,
நரம்பியக்கடத்துகை மூலம்
வெளிப்படுத்திக் கொண்டேயிருகின்றது!

அதனால் என் மரபிழையின் ஏதோ ஒரு நுண்கூறு,
ஆதி மனிதனிடமிருந்து
அப்படியே வந்ததாகவும் இருக்கலாம்!

அதே மனிதனிடமிருந்து,
மற்றொரு நுண்கூறு,
உன் மரபிழையிலும் இருக்கிறதா என்ன?

இருப்பின்,
எந்த விண்மீன் படலத்தில் குடிகொண்டுள்ள,
எந்த கிரகத்தின் ஆட்சி தெய்வம்,
உன்னையும் என்னையும் மட்டும்,
தன் பிடியில் வைத்தபடி,
இடம்பெயராமல் நின்று,
நம்மை இணைத்துக்கொண்டிருக்கிறது
என் ஆத்மார்த்த தோழனே?
-நிவேதா