Sunday 3 January 2016

செவிகளை ஏமாற்றும் அகாலத்தின் ஓசை


என்னுடலின் ஒரு பழைய செல் உடைந்து
புதிய செல்களாய் ஜனனிக்கும் ஓசை
இன்று மிகத்துல்லியமாய்க் கேட்கின்றது!
என் தோட்டத்தின் பழங்களெல்லாம்
கனிந்து மணந்திருந்த
பனியிரவின் கனவொன்றில்
நீ சொன்ன செய்தியிலிருந்து
என் செவிகளை இவ்வாறு
பக்குவப்படுத்தி வைத்திருக்கிறேன்!
சில காலமாக இங்கே வந்துகொண்டிருக்கும்
ஒற்றை வௌவாலுக்கு
அதன் குரலின் எதிரொலியே
கண்களாய் வழிநடத்தி
என் கனிகளை காட்டிக்கொடுக்கிறது
எனச் சொல்லி மறைந்தாய்!
கற்றதும் கண்டதும் போக,
கேட்டே உறுதிபடுத்திக் கொள்வோமென
காதுகளை திறந்துவைத்து
உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
வௌவாலின் குரல் நம் செவிகளுக்கு கேட்காதென
பிறகொரு ஜாமத்தில் சொல்லி
மீண்டும் மறைந்தாய்!
நிலவற்ற அந்த இரவிலிருந்து
வௌவால் எழுப்பும் அந்த ஒலி
உன் பெயராகத்தான் இருக்குமென்ற நினைப்பு
வேரூன்றி வளர்கிறது!
பக்குவப்படுத்தலின் முதல் கட்டமாக
காய் கனிகின்ற ஓசை கேட்டது!
அடுத்தடுத்த கட்டங்களில் துல்லியம் கூட,
என் உடலில் 1,18,488 செல்கள்
இந்த நிமிடம் இறந்திருக்கின்றன என்று
கணக்கெடுத்து வைத்திருக்கிறேன்!
அந்த வௌவாலின் குரல் மட்டும்
இன்னும் கேட்டப்பாடில்லை!
சோடியம் வெளிச்சத்தில் என் முகத்தை
நீ ரசித்த குளிர் நினைவை மீட்டெடுக்க
கையில் லாந்தரோடு காத்திருக்கிறேன்!
முப்பது நாட்களும் மனதை உறுத்தி
உயிரை சுரண்டியே எடுக்கும்
விடாய் வலியாய் வதைக்கிறாய்!
என் தோட்டத்தில் மட்டும் வசந்தம் விடுவதாயில்லை
பூக்கள் வாசத்தை முடக்கிக் கொள்வதாயில்லை
மரங்கள் கனி தருவதை நிறுத்திக் கொள்வதாயில்லை
வௌவால் தன் பாதையை மறந்து தொலைப்பதாயில்லை
நீயும் வருவதாயில்லை!
இந்த அகால தனிமையில்
நீர்த்துப்போகும் என் உயிரைத் தேக்கி
தோட்டத்து வேர்களுக்குப் பரிசளித்தபின்
கனிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதென
அந்த வௌவால் வந்து சாட்சி சொன்னாலாவது
என் நினைவு வந்து திரும்புவாயா?
-நிவேதா