Saturday, 28 December 2013

சிரித்துக்கொண்டே இருக்கும் அந்த மரப்பாச்சி!

சிரித்துக்கொண்டே இருக்கும் அந்த மரப்பாச்சி!

அந்த மரப்பாச்சி இன்றும் சிரித்துக்கொண்டே தான் இருக்கிறது!

அது பிறந்த தினத்தன்று அந்த மரத்தச்சன்
அதன் முகத்தில் புன்னகையை விதைத்துவிட்டு
ஒரு சுவரோர அலமாரியை அதன் இருப்பிடம்  ஆக்கிவிட்டான்
அந்த ஜன்னலோர அலமாரியை மாசில்லா வேட்கையோடு பார்த்தபடி
அந்த மரப்பாச்சி சிரித்துக்கொண்டே தான் இருந்தது...

திடீரென்று ஒருநாள் அது விலைபேசப்பட்டு
அம்மரதச்சனால் ஒரு வீட்டிற்கு அனுப்பப்பட்டது
அந்த சுவரோர அலமாரியை இருப்பிடமாக நினைத்து
தான் அடைந்த ஏமாற்றத்திலும்
அந்த மரப்பாச்சி  சிரித்துக்கொண்டே தான் இருந்தது...

அது அந்த வீட்டிற்குள் வரவேற்கப்பட்ட தினத்தன்று
கண்ணாடியால்  மூடப்பட்ட ஓர் அலமாரியில் குடிவைக்கப்பட்டது
இன்னொரு மரப்பாச்சிக்கு ஜோடியாக...!

அலங்காரம் நன்றாகத்தான் இருந்தது...
அதற்க்கும் அந்த வீட்டிற்கும்!

வெளிக்கட்டிலிருந்த அந்த ஊஞ்சலின் ஒற்றை இருக்கையை ஏகாந்தக்கனவோடு பார்த்தபடி,
அந்த மரப்பாச்சி இன்றும் சிரித்துக்கொண்டே தான் இருக்கிறது...

அவளும் சிரித்துக்கொண்டே தான் இருக்கிறாள்...

                                                                                    -நிவேதா

Monday, 23 December 2013

சாளரம்

                        சாளரம்

திறந்தே  இருக்கட்டும்...
அடைத்திட வேண்டாம்...

கைபேசி கதிர்களிடமிருந்து தப்பித்த
ஒன்றிரண்டு அபூர்வ பறவைகள் நலம் விசாரிக்கக்கூடும்...

வஞ்சம் அறியாத பிள்ளைகளின் சுவசக்காற்றல் செலுத்தப்பட்ட
குமிழிகள் சில கவனத்தை ஈர்க்கக்கூடும்...

கற்காரை தரையில் விதையுண்டு அரும்பிய
பெயர் தெரியாத மலர்
பார்வையை வரவேற்கக்கூடும்...

புதிதாய் புலர்ந்த இளங்கீற்று
காரணம் அரியது வழியும் கண்ணீரை
 ஆவியாக்கி குளிரக்கூடும்...

பக்கத்துக்கு வீட்டிலிருந்து சமையல் மனம்
எதிர்வீட்டிலிருந்து விருப்பமான பாடல்
கூதர்காற்றினால் நகர்த்தப்பட்ட சருகுகளின் சலசலப்பு
வெளிச்சுவற்றில் ஊர்ந்து செல்லும் பல்லியின் சத்தம்  

அனைத்தும்...அனைத்தும்...
தனியறையின் நிசப்தத்தை குலைக்ககூடும்...

இருட்டறையின் சாளரம் ஏகாந்தத்தின் திறவுகோள் ...
திறந்தே இருக்கட்டும்...
அடைத்திட வேண்டாம்...
                                  -நிவேதா