Thursday 3 March 2016

நிழலெனப் பிரகாசிக்கும் ஐந்தாம் பரிமாணம்!


நூல் பொம்மையின் ஆட்டம்
நூல்களில் இருந்து
விடுபட்ட பிறகுதான் துவங்குமென
நெருப்பின் நிழலோடு
வாதம் செய்து கொண்டிருக்கின்றன
இரு கண்கள்!

நான்கு இழைகளில்
ஆன்மாவைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும்
அந்த பொம்மையின் கண்கள்
எதிரே குவிந்திருக்கும்
கூட்டத்தில் தேடுவது
நிச்சயம் உன்னையல்ல!

அது நான்காவது பரிணாமத்தின்
இல்லாதிருத்தலை நிறைத்துக்கொண்டிருக்கும்
எல்லையற்ற ஏகாந்தப்
பெருவெளியாக இருக்கலாம்!


அங்கு கணக்குகளை மறந்த
அகால அடைவுகளையும்
பெயரற்று உருகும்’
ஸ்வரக் கோர்வைகளையும்
என் இருப்பு இயக்கிக்கொண்டிருக்கலாம்!

அக்கணம் பாதங்கள்
தரையை மறந்த களிப்பில்
ஒவ்வொரு செல்லும்
தன்னைத்தானே இசைத்தபடி
தனித்தனியே அதிரத் துவங்கலாம்!

அந்த அதிர்வின் அடர்த்தி தாளாமல்
ஏதேனும் ஒரு செல்
உடைந்து சிதற நேர்ந்தால்
தரையிழுக்கும் ஈர்ப்பு சக்தியாக மட்டும்
நீ இருந்துவிட்டுப்போ!

நூல் பொம்மையின் இயக்கமும்
புவியீர்ப்பு சக்தியைச் சார்ந்ததென
வாதம் முடக்கப்படுகிறது!

அதோ!
விழுந்து கொண்டிருக்கும்
வால் நட்சத்திரத்தின்
ஐந்தாவது முனையிலிருந்து
நீளும் ஐந்தாவது பரிமாணத்தின்
நிழல்தான் இந்த இருண்ட வானமெனவும்
அதுவே நீயெனவும்
என் கண்களைச் சிமிட்டுகிறாய்!

நெருப்பின் நிழல்
இருண்மையை நீயெனப் பிரகாசித்து
நடனமிட்டுக் களிக்கிறது!
-நிவேதா



No comments:

Post a Comment