Tuesday 1 July 2014

நியூரான்களின் நிரற்தொடர்ச்சி

நியூரான்களின் நிரற்தொடர்ச்சி
**********************************************
அந்த ஆசிரியர் அன்று விடுப்பு எடுத்திருக்கலாம்!
நரம்பு மண்டலத்தில் குவிந்து கிடக்கும்
அத்தனை கோடி நியூரான்களும் 
உன் இன்மையை உணர்ந்திருக்கின்றன!

மாதிரிகள் எதையும் அருகில் உணராததால்
என்னுடன் சேர்ந்து புடைத்து அழும் நரம்புகள்,
உன் இயல்பென நான் பாவித்த அணைத்து
நிறங்களையும்
பிரதிபலிக்கும் அதிசயக் கண்ணீரில்,
ஒவ்வொரு நியூரானும் தனக்குப் பிடித்த
நிறத்தைத் தொடர ஆரம்பித்து விட்டது!

பேராசை பிடித்த சில நியூரான்கள்
பார்வைக்குப் புலப்படும் அத்தனை நிறங்களையும்,
தானே குறிக்க நினைத்து,
ஒன்றோடு ஒன்று சண்டை இட்டுக்கொன்டத்தில்
என் நரம்புகளெல்லாம் இன்னும் புடைத்தழுகின்றன!

உடலில் ஏதேனும் ஒரு பாகம் வெட்டுண்டால்
அப்பாகத்தை நிரற்தொடர்ந்த நியூரான்கள்
அருகில் இருக்கும் வேறொரு பாகத்தை
தொடரத் துவங்கிவிடும் என்று
உனக்கு கற்பித்த அன்று,
அந்த ஆசிரியர் நிஜமாகவே விடுப்பு எடுத்திருக்கலாம்!
-நிவேதா

2 comments:

  1. அருமை... ஆழமும் எளிமையும் ஒரு சேரக் கடல் போல கவரும் கவிதை...
    கலைச்சொற் கையாளல் சிறப்பு...
    தமிழ் படிக்காதவரே தேவை தமிழிக்கு - என்பதென் கருத்து,
    பிற துறை கற்று அவற்றின் கருத்துருக்களைத் தமிழில் அழகாய் எளிதாய் சொல்லும் நவீன ‘தமிழர்’களே தேவை நமக்கு!
    நியூரான் நிரற்தொடர்ச்சி - தமிழன்னை தலைநிமிர்கிறாள்...
    ஒரு சிறிய வேண்டுதல் - கையாண்ட துறைசார் கருத்துருவைப் பற்றியும் ஒரு சில வரிகள் எளிதாய், அழகாய் இரத்தினச்சுருக்கமாய் பகிர்ந்தால்
    கவிதையோடும் காதலோடும்
    கல்வியும் கற்கலாம்
    கன்னித்தமிழின் கல்கண்டு மொழியில்...
    செய்க... செய்ய முயல்க!

    நன்றி,
    விஜயநரசிம்மன் :-)

    ReplyDelete