Saturday 10 October 2015

வெளிச்ச வெறுமையின் இருள் கமழும் கண்கள்



திரைச்சீலைகள் அகற்றப்பட்ட ஜன்னலின்
வெளிச்ச வெறுமை நீ!
நிசியில் உன் கண்களாய்ப் பூத்து
என் நாசியில் சில்லிட்ட பவழமல்லிப்பூக்கள்
விடியலில் என் செல்களாய்
உதிர்வதை எண்ணிப் பரிதாபப் படுகிறேன்!
உன் கண்களுக்கொரு வாசமுண்டு!
என்னைத் தவிர வேறு யாரும்
உணர்ந்திருக்க முடியாது!
விழுந்து மறைந்த
ஓர் ஆதிநட்சத்திரத்தின் துகளை
என் அலமாரியின் இருட்டில்
புதைத்து வைத்திருக்கிறேன்!
அதன் இருள் கமழ்கிறது
உன் கண்களாய்!
வெளிச்சமற்றதே இருளென்றால்
இருளில் இருப்பதுதான் என்ன!
ஏதுமற்ற சூன்யத்தின் பரிபூரணமாய்
அழுத்தத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கும்
அந்த இருப்பு
நீயாகத்தான் இருக்க வேண்டும்!
இருளின் வாசம் தித்திக்கிறது!
அப்படியே உன் கண்களைப்போல!
அதனை ஸ்பரிசிக்க இசைந்து
கைகளில் அள்ளி
கன்னத்தில் ஒற்றிக்கொள்ள
நேரும் கணத்தில் தான்
வெளிச்ச வெறுமையாய்
தகிக்கத் துவங்குகிறாய்!
உண்மைதான்!
ஜன்னல் திரைகள் பற்றி
எனக்கு எந்த கருத்தும் இல்லை.
-நிவேதா

No comments:

Post a Comment