Sunday 26 January 2014

மரணம் ஈன்ற ஜனனம்

           மரணம் ஈன்ற ஜனனம்
நீ நீர் சூழக்கிடந்தால் குளிருமென,
உள்ளங்கை வெப்பத்தால் குளிர்காய வைத்தேனே!

பூமி தொடா உனக்கு,பெயர் சூட்டி,மை தீட்டி,
கண்மணியே வண்ணக்கனவு வளர்த்தேனே!

உன் பிஞ்சு கால்கள் என்னை உதைத்தபோதும்
கைநிறைய வளவி பூட்டி உன் நாட்டியத்திற்கு இசைத்தேனே!

சோறு தண்ணீர் வேண்டாமென்று வெளியே தள்ளி,
உன் கனவுகளால் என் பசிபோக்கிய அன்னமே!

என்ன குறை கண்டாய் நீ இப்புவியில்?
உனக்கெனவே என் உடலில் ஓடும் உதிரத்தைப் பாலாக்கி,
பசியாற்றேன் எனத் தவறாக நினைத்தாயோ?

பொற்கிண்ணத்தில் தேனூற்றி
நிலாச்சோறு ஊட்டமடேன் எனக் கனாவிலும் நினைத்தாயோ?

செவியோரம் இசையமைத்து,கை விரலில் நடைபழக,
தோழி கிடைக்க மாட்டாள் என நினைத்தாயோ?

மனதின் நிறம் மட்டும் பார்த்து உன் உயிருக்குள் உயிராக,
காதலன் கிடைக்க மாட்டான் என நினைத்தாயோ?

பத்து மாதம் உள்ளேயே இருந்தாயே,இன்னும் ஒரு நாள் பொறுக்க மனம் இல்லையோ?

இல்லை,நீ பிறந்தால் நான் இறப்பேன் என்று எண்ணி,
தொப்புள் கொடியைத் தூக்கு கயிறாக்கி, நீ மடிந்து எனக்குத் தாயானாயோ?

என் இரத்தம் பாலாகி உன் திருவாய் சேர இயலாமல்,
அத்தனையும் கடலாகி கண்ணிரண்டில் ஓடுதமா!

நீ வாழ்ந்த பனிக்குடம் முழுதாய் வற்றிப்போய்,பாலைவனமாய் கிடக்குதம்மா!

உன் இனிய அழுகையொலி கேளாமல்,காதிரண்டும் கதறுதம்மா!

நீ போட்ட இந்த உயிர்பிசையை ஏற்றுக்கொள்ளவா?

மேகத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு,
வந்து நடை கற்றுத்தரவா?


கவிதையாக்கம்:நிவேதா