Sunday 13 April 2014

நிற்காத பூமியை நிற்கச்சொல்லி...!

                 நிற்காத பூமியை நிற்கச்சொல்லி...!
இன்னும் ஒரு வாரத்தில் ஒரு புது உயிரை,புது உறவை,
தன் வாழ்விற்குள் வரவேற்கும் ஒரு பூரிப்பு காணப்படவில்லை அவள் கண்களில்!
தன் கையில் அணிந்திருக்கும் வளையல் தங்கமில்லை ஆனாலும்,
அதன் ஒலியால் தன் வயிற்றில் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த உயிரை
 எழுப்பும் ஓர் அவசரம் வெளிப்படவில்லை அவள் முகத்தில்!
நிற்காத பூமியை நிற்கச்சொல்லி கண்கள் மூடி வேண்டுகிறாள்!
நடக்காது எனத் தெரிந்தும்,நடக்காத ஒன்றை நடக்கச்சொல்லி அழுகிறாள்!
கண்கள் தாண்டி வழிந்த கண்ணீர்,அவள் நாவில் தன் சுவையைத் தீட்டிய போதும்,
அதை துடைக்கும் நோக்கத்தோடு கூட வயிறை விட்டு விலக விரும்பவில்லை அவள் கைகள்!
தன் வாழ்நாள் முழுவதும் அவள் அனுபவிக்க வேண்டிய அந்த தொடுதலை ஸ்பரிசிக்க,
அவளுக்கு தரப்பட்ட கால அவகாசம்,அந்த ஒரு வாரம்!
தாயாகத்  துடிக்கும் ஒரு பெண்ணிற்கு வரம் தரும் தெய்வமாகும் சிலிர்ப்பு ஒரு புறம்...!
கிடைத்த வரத்தை சாபமாக எண்ணி தாரைவார்க்கும் வறுமையின் கொடூரம் மறுபுறம்...!
இதுவும் கடந்து போகும் என இருபது ஆண்டுகள் கழித்துவிட்ட அவள் மனதில்,
இதுவரை எழாத ஒரு புதிய உணர்வு!
என்றோ உடைந்த கடிகாரத்தை பார்த்துக்கொண்டே,
அது உடைந்ததை எண்ணி ஆறுதல் அடைகிறாள்!
அந்த வாடகைத்தாய்!
நிற்காத பூமியை நிற்கச்சொல்லி...!!!

                                                -நிவேதா

2 comments:

  1. நல்ல ஓட்டம்... அழகான சித்தரிப்பு... ஆழமான தாக்கம்!
    சொல்ல வந்த செய்தி புரிந்துவிடுகிறது முன்வரிகளில்,
    ‘அந்த வாடகைத்தாய்’ என்பது என்வரையில் அதிகப்படி,
    சிலருக்குப் புரிய தேவைப்படலாம் அது அப்படி!

    பேனா கொண்டவனெல்லாம்
    தாளைக் கண்டவனெல்லாம்
    வார்த்தையில் விளையாடி
    தனக்குத்தானே புகழ்பாடி
    கவியென்பதைக் கண்டு
    கலங்கி நொந்ததுண்டு

    ஆறுதலாய் நின் வரிகள்
    அன்னைத்தமிழ் முகவரிகள்...

    நிறைய எழுதுக
    நிறைவாய் எழுதுக...

    -விஜய் :-)

    ReplyDelete